ADVERTISEMENT

"மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள சூழலில் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்"- வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்! 

09:14 PM Oct 08, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள சூழலில் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இப்பாடத்திட்டம் அமலானால், தமிழுக்கு முக்கியத்துவம் இருக்குமா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல துறைகளைக் குழப்பிவிட்டு, தற்போது கல்வித்துறையையும் குழப்பத் தொடங்கியுள்ளனர். தமிழக பாடத்திட்டம் தமிழுக்கு முக்கியத்துவம் தருகிறது. மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளதன் மூலம் தமிழைப் புறக்கணிக்கும் சூழல் உருவாகும். முதலமைச்சர் ரங்கசாமி இவ்விஷயத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மின்துறைத் தனியார் மயமாக்க டெண்டர் வெளியீட்டைத் தொடர்ந்து மின்துறையினர் போராட்டம் நடத்தினர். மின்துறையை 100 சதவீதம் தனியார் மயமாக்கும் முடிவு, இந்தியாவில் எம்மாநிலத்திலும் இல்லை. இதில் அரசின் நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, மின்துறையின் ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான இடங்களை ரூபாய் 1- க்கு வாடகை தர முடிவு எடுத்துள்ளனர். அத்துடன் மின்துறை சாதனங்களைக் குறைந்த தொகைக்கு தனியார் பயன்படுத்த அனுமதிக்கவும் டெண்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆளுநர், முதலமைச்சர், துறை அமைச்சர் அனுமதி இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்காது. டெண்டர் யாருக்கு தரவேண்டும் என முடிவு எடுத்துதான் இந்த வழிகாட்டுதல்கள் டெண்டரில் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே, மதுபான தொழிற்சாலை அனுமதியைத் தொடர்ந்து, மின்துறை தனியார் மயமாக்கும் விஷயத்திலும் அரசு மற்றும் ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மின்துறை தனியார்மயம் தொடர்பான டெண்டரை வாபஸ் பெறாததன் மூலம் மின்துறையினரையும், மக்களையும் அரசு ஏமாற்றுகிறது" என்று தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT