ADVERTISEMENT

கள்ளச்சாராய பலி; “புதுச்சேரி அரசே பொறுப்பு... ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்” - நாராயணசாமி

07:02 PM May 17, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரியில் கள்ளச் சாராயம் இல்லை என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மரக்காணத்தில் கள்ளச் சாராயம் சில்லறை விற்பனை செய்தோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதில் அவர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த இருவரிடம் அதனை வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புதுச்சேரியிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு தமிழ்நாட்டில் விற்கப்பட்டு பலியான உயிர்களுக்கு புதுச்சேரி அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். கலால் துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், அதிகாரிகளும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காவல்துறை, கலால் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலால் துறை அதிகாரிகள் மாதந்தோறும் பணம் வசூல் செய்து முதல்வர் ரங்கசாமிக்கு நேரடியாக பணம் தருவதை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன்.

கள்ளச் சாராய உயிரிழப்புக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தமிழ்நாட்டில் ராஜினாமா செய்ய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரியில் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு நடக்கிறது. அதே கோரிக்கையை புதுச்சேரியிலும் முன்வைத்து முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை ராஜினாமா செய்ய அவர் வலியுறுத்துவாரா? இதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும்.

இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கலால் துறையினர் லஞ்சம் வாங்கி தந்ததால் கண்டுகொள்வதில்லை. கள்ளச் சாராயத்தால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT