ADVERTISEMENT

அரசு கல்லூரியைத் தற்காலிக சிறைச்சாலையாக மாற்றப் புதுச்சேரியில் கடும் எதிர்ப்பு!

01:36 PM Apr 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவாமல் தடுத்திட புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும் புதுச்சேரி காவல்துறை, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவர்களைச் சொந்த ஜாமீனில் விடுவித்து வருகிறது.

ADVERTISEMENT

சிறையில் வைக்க வேண்டிய குற்றவாளிகளை அடைக்கும் பொருட்டு இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் தற்காலிக சிறைச்சாலையாக மாற்றி புதுச்சேரி அரசு ஆணையை வெளியிட்டுள்ளது. அதற்கான பணிகளை முழு வேகத்துடன் அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கலைக் கல்லூரியைச் சிறைச்சாலையாக மாற்ற போர்க்கால அடிப்படையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் கல்விக் கூடங்களைச் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு மாணவர்கள் சங்கங்கள் மற்றும் சமுக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "சுமார் 1,500 மாணவர்களுக்கு மேல் கல்வி பயிலும் கல்லூரியில் வேலை வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்த கூடிய கல்விப் பிரிவுகளைப் புதுச்சேரி அரசு புதுவை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இக்கல்லூரிக்கு என்று சொந்தக் கட்டிடம் இல்லாத சூழலில் மாணவர் அமைப்புகள் மற்றும் கல்லூரியில் பயின்ற மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாகக் கடந்த ஆண்டு 12 வகுப்பறைகளைக் கொண்ட ஒரு புதிய கல்வி வளாகம் இக்கல்லூரியில் கட்டப்பட்டது.

தற்பொழுது இந்தப் புதிய கல்வி வளாகத்தில்தான் தற்காலிக சிறைச்சாலை அமைக்கப்படுகிறது. உலக வரலாற்றில் ஒரு கல்விச் சாலையைச் சிறைச்சாலையாக மாற்றிய முட்டாள்தனமான நிகழ்வு எந்த ஒரு நாட்டிலும் இதுவரை நடைபெற்றது இல்லை. புதுச்சேரி அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருவதாக மார்தட்டிக் கொண்டும், புதுச்சேரி மாநிலம் உயர்கல்வியின் கேந்திரம் என்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொண்டும் வரும் வேளையில் ஒரு உயர் கல்வி நிறுவனத்தைச் சிறைச் சாலையாக மாற்றி வரலாற்று தவறை நிகழ்த்தியுள்ளது.


இது ஒரு தற்காலிக சிறைச்சாலை தான் என்றாலும் மீண்டும் கல்லூரி திறந்தவுடன் இந்தச் சிறைச்சாலையில் தான் நாம் கல்வி பயில்கிறோம் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை மாணவர்களிடையே மேலோங்கும். எனவே கல்விக் கூடங்களைச் சிறைச்சாலையாக மாற்றும் எண்ணத்தை கைவிட்டு மாற்று வழிகளைச் சிந்தித்து செயலாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் இந்திராகாந்தி அரசு கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு சிறைச்சாலை வளாகத்தில் கல்லூரி அமைக்க முடியுமா? அப்படி இருக்க ஒரு கல்லூரி வளாகத்தினுள் எப்படிச் சிறைச்சாலை அமைக்க முடியும்? கல்லூரி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பாதி வகுப்பறைகள் கோழிக் கூண்டு போல் இருந்து வருகிறது. அதை மேம்படுத்த ஆர்வம் செலுத்தாத அரசாங்கம் இன்று அதனைச் சிறைச்சாலையாக மாற்ற ஆர்வம் காட்டுவது ஏனோ? இதில் என்ன பெரிய விஷயம் என்றால் மாணவர்கள் சிலர் பயின்று வரும் அந்தக் (கல்லூரி வகுப்பறைகளை) கோழிக் கூண்டடுகளைத் தவிர்த்து விட்டு கட்டிடத்தில் உள்ள 12 கல்லூரி வகுப்பறைகள் மட்டும் குற்றவாளிகளை வைக்கும் தற்காலிகாக சிறைச்சாலைகளாக மாற்றப்படுகிறது. மாநில மாணவர்களின் நலனை விட குற்றவாளிகளின் நலனில் புதுச்சேரி அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து மாணவர்களும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடத்தைச் சிறைச் சாலையாக மாற்றுவதை உடனடியாக கைவிட்டு வேறு இடத்துக்கு மாற்றிச் செல்ல வேண்டும் எனவும், மீறும் பட்சத்தில் தொகுதி மக்களை ஒன்றிணைத்து முற்றுகை போராட்டம் நடைபெறும்" எனவும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.ஜெ.ஜெயபால் அறிவித்துள்ளார்.


தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில அமைப்பாளர் சி.ஸ்ரீதர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “புதுச்சேரியில் பல அரசு அலுவலகங்கள் செயல்படாமல் உள்ளது. திருமண மண்டபங்கள் உள்ளது. பல்வேறு உணவு விடுதிகள் உள்ளது. அதனை எல்லாம் பயன்படுத்தாமல் வருங்காலத் தூண்கள் என்று அழைக்கப்படும் மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் கல்விக் கூடங்களைத் தற்காலிக சிறைக்கூடங்களாக இந்த அரசு மாற்றியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். சிறிது காலத்திற்குப் பிறகு இங்குப் படிக்கும் மாணவ, மாணவிகள் வகுப்புக்கு வரும்போது கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக நேரிடும். மேலும் அரசு இதற்குச் செலவிடும் பணம் வீணாகத்தான் போகும். பள்ளியைச் சீரமைக்க மீண்டும் செலவு ஆகும்.

எனவே எக்காரணத்தை கொண்டும் பள்ளி அறைகளைச் சிறைக்கூடங்களாக அரசு மாற்றியதை ஏற்று கொள்ள மாட்டோம். அரசின் செயலைப் புதுச்சேரி மாநில தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது. இதனை உடனடியாக மாற்றவில்லை எனில் மக்கள் மேல் நலன் உள்ள அனைத்துக் கட்சிகள், அமைப்புகளை ஒன்றிணைத்து பெரும் போராட்டம் நடத்தப்படும்" எனக் கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT