Skip to main content

"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்!"- முன்னாள் முதல்வர் ரங்கசாமி பேச்சு...

Published on 07/02/2021 | Edited on 07/02/2021

 

 

puducherry former cm rangasamy speech


அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 11- ஆம் ஆண்டு தொடக்க விழா ஈசிஆர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரியின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். 

 

கட்சியின் கொடியை ஏற்றி வைத்த ரங்கசாமி, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது பேசிய ரங்கசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை அனைத்து கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற்றால் மட்டுமே புதுச்சேரி வளரும். அதனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சிகளும் வலியுறுத்த வேண்டும். மாநில அந்தஸ்து வழங்கினால் மட்டுமே தேர்தலைச் சந்திப்போம் என அனைத்து கட்சிகளும் அறிவிக்க வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாரா? என சவால் விடுத்தார்.

 

அதைத் தொடர்ந்து பேசிய அவர், "புதுச்சேரியில் அதிக இடங்களில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு எல்லா நிலைகளிலும் தோல்வியடைந்துள்ளது. தொடர்ந்து கவர்னர் மீது பழி சுமத்தி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறார் முதல்வர் நாராயணசாமி. ஒரு மாநில முதல்வர் பொய்யான தகவல்களை மக்களிடையே பரப்பி வருகிறார். இது முதல்வர் பதவிக்கு அழகல்ல. இன்று புதுச்சேரியில் அனைத்து மக்கள் நல திட்டங்களும் தற்போது ஆளும் காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டுள்ளது. 

 

ஒரு திட்டத்தை கூட இவர்களால் சிறப்பான முறையில் நிறைவேற்ற முடியவில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை. எவ்வளவோ காலிப் பணியிடங்கள் இருந்தும் அவற்றை நிரப்பாமல் புதுச்சேரி இளைஞர்களைத் துன்புறுத்தி வருகிறது. மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வருகின்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமையும்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்