ADVERTISEMENT

மீனவர்கள் மோதல்... துப்பாக்கிச்சூடு... நீதி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்! 

07:06 PM Oct 16, 2019 | santhoshb@nakk…

சுருக்கு மடி வலை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக, புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம், தமிழ்நாடு எல்லையில் உள்ள கடலூர் மாவட்டம் நல்லவாடு பகுதி மீனவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த 14- ஆம் தேதி நல்லவாடு மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த வீராம்பட்டினம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை தாக்கினர்.

ADVERTISEMENT

இந்த தாக்குதல் பற்றி தகவல் கிடைத்ததும் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அங்கு இரு கிராம மீனவர்களும் வீச்சருவாள், கத்தி, சுளுக்கி போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பு மீனவர்களின் படகுகளும் சேதமடைந்தது. அதையடுத்து கடற்கரையிலும், கடலிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட மீனவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறை எச்சரித்தும், அவர்கள் கலைந்து செல்லாததால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதுடன் மூன்று முறை கண்ணீர்ப் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன.

ADVERTISEMENT


அதன்பிறகே மீனவர்கள் கலைந்து ஓடினர். துப்பாக்கி சூட்டில் சுகுமாரன்(37), மேலும் கலவரத்தில் வீராம்பட்டினம் சுந்தர், பிரபு நல்லவாடு அய்யனார், மஞ்சினி, ரவிச்சந்திரன் என இரு தரப்பை சேர்ந்த ஆறு பேர் படுகாயமடைந்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலையடுத்து இரு தரப்பையும் சேர்ந்த 1100 பேர் மீது தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே துப்பாக்கிச்சூடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் செயலாளர் கோ.சுகுமாறன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் " போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மீனவர்கள் 600 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.


வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க அரசு தவறியதே இக்கலவரத்திற்கு மூலக் காரணமாகும். இக்கலவரத்திற்கும், போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கும் அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். கலவரத்தில் ஈடுபட்ட மீனவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையால் இரு மீனவக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் ஊரைவிட்டு வெளியேறி உள்ளனர். எனவே, கைது நடவடிக்கையைக் கைவிட்டு இருகிராம மீனவர்களிடையே அமைதியையும், நல்லுறவையும் ஏற்படுத்த அரசும், காவல்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


எதிர்காலத்தில் இதுபோன்று மோதல் நடக்காமல் இருக்க மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் நிரந்திரத் தீர்வுக் காண வேண்டும். மீனவக் கிராமங்களிடையே சுமூகமான உறவை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT