Advertisment

புதுச்சேரியில் ஆளுநர் உரையின்றி பட்ஜெட் தாக்கல்!

Puducherry files budget without Governor speech

Advertisment

புதுச்சேரி மாநிலத்தின் நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ரூபாய் 9,000 கோடிக்கு மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மானிய கோரிக்கைகளின் விவரங்கள் துறை ரீதியாக முழுமையாக சமர்ப்பிக்கவில்லைஎன்றும், ஆளுநர் உரையைக் கால தாமதமாக அனுப்பியதாக கூறி கிரண்பேடி பட்ஜெட் உரையாற்றுவதற்கு வர மறுப்பு தெரிவித்தார்.

ஆனால், மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே கூட்டத்தொடர் தொடங்குவதால் ஜனநாயக முறைப்படி ஆளுநர் பங்கேற்கலாம் என்று துணை நிலை ஆளுநருக்கு முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். அதற்கு கிரண்பேடி, "பட்ஜெட்டிற்கு முழு வடிவம் பெறாமல் சட்டப்பேரவையை ஏன் கூட்ட வேண்டும்என்று கேள்வி எழுகிறது, யூனியன் பிரதேச சட்டப்படி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் பெற்ற பிறகே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சரியான கோப்புகளை அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பு வேறு ஒரு தேதியில் சட்டப்பேரவை கூட்டினால் ஆளுநர் உரை அளிப்பதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்காத சூழலில் தெரியாத அறிக்கைக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்கமுடியும்," என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கூட்டத்தொடர் இன்று (20.07.2020) காலை 9.30 மணிக்கு கூடியது, பேரவை தொடங்கியது. 10 நிமிடங்கள் வரை காத்திருந்தும் கிரண்பேடி வராததால் சட்டப்பேரவை நிகழ்வை தொடங்கியசபாநாயகர் சிவக்கொழுந்து, துணை ஆளுநர் உரையாற்ற வரவில்லை என்பதை சுட்டிக்காட்டி அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் அடுத்த நிகழ்வான 2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக்கூறி பேரவையைச் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

Advertisment

Puducherry files budget without Governor speech

அதன்பின்னர் சரியாக 12 மணியளவில் மீண்டும் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரூபாய் 9000 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், "வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு குடிநீர் வரி ரத்து செய்து, 100 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்துபவர்களுக்கு மின்சார இலவசம், நம்மாழ்வார் வேளாண் புத்தாக்கத் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, நெல் உள்ளிட்ட சிறுதானியம் மற்றும் இதர பயிர் வகைகளுக்கு அரசு மானியம். புதுச்சேரியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைத்தல், நாடுமுழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டையில் வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் கடைகள் புதுப்பித்தல்,பால் உற்பத்தியைப் பெருக்க மகாத்மா காந்தி பெயரில் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கல், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவ, மாணவியருக்கு தற்போது பால் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 'கலைஞர் சிற்றுண்டி திட்டம்' என்ற பெயரில் காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி என சிற்றுண்டி வழங்கல், ரூபாய் 4 கோடி செலவில் புதிய கல்வி தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடங்குதல், அப்துல்கலாம் பெயரில் 10, 12ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா கைக்கணினி வழங்குதல்,ஏனாம் பிராந்தியத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி இந்த கல்வி ஆண்டில் துவங்குதல், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கல்லூரிகள் மாணவர்களுக்கு அனைத்து கல்விக் கட்டணத்தை ரத்து செய்து இலவச கல்வி வழங்குதல்,பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக தகவல் தொழில் நுட்ப பாடப்பிரிவுகள் தொடங்குதல், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்திராகாந்தி மருத்துவ காப்பிட்டு திட்டம் தொடங்கப்பட்டு முழு மருத்துவக்காப்பீடு வழங்குதல், தனியார் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விலையில்லா கைக்கணினி வழங்கல், ஆதிதிராவிடர்களுக்கு திருமண நிதி உதவியாக ரூபாய் 75,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை உயர்த்தி ரூபாய் ஒருலட்சம் வழங்குதல் உள்ளிட்ட பல திட்டங்கள் அடங்கிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு பிறகு, சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டப்பேரவை நிகழ்வை நாளை(21.07.2020) காலை 9.30 மணி வரை ஒத்திவைத்தார். முன்னதாக, முதல்வர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து கொண்டிருந்தபோது, ஆளுநர் அனுமதியின்றி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரியில் ஆளுநர் உரை இல்லாமல் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது இதுவே முதல் முறையாகும். மேலும், நீண்ட நாட்கள் நடக்க வேண்டிய இந்த முழுமையான பட்ஜெட் கூட்ட தொடரானது, கரோனா நோய்த் தொற்று காரணமாக இரண்டு நாட்களுக்குள் முடித்துக்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த கூட்ட தொடரில் கரோனா‌ நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Narayanasamy budget Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe