புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ப்ரீபெய்ட் மின் திட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் ஆயிரக்கணக்கானோர் முற்றுகை போராட்டத்தில்ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கல் மற்றும் ப்ரீபெய்ட் மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில்புதுச்சேரி -காரைக்கால் மக்கள் போராட்டக் குழுவிலுள்ள தமிழர் கழகம்,நாம் தமிழர் கட்சி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தமிழ்த்தேசிய பேரியக்கம்,திராவிடர் விடுதலை கழகம், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமை கூட்டமைப்பு, தி.க, தந்தை பெரியார் திராவிட கழகம், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், அம்பேத்கர் தொண்டர் படை, மக்கள் வாழ்வுரிமை இயக்கம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட 55 சமூக அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்திலிருந்து மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாகச்சென்றனர்.
அப்போது சோனாம்பாளையம் சந்திப்பில் போலீசார் தடுப்புகளைப் போட்டு நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையேதள்ளுமுள்ளு ஏற்பட்டது.தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் நேரு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் சோதனைக் களமாக புதுச்சேரி மாநிலத்தை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதாகவும், மக்களின் கருத்துக்களை கேட்டு ப்ரீபெய்ட் மின் திட்டத்தை துணைநிலை ஆளுநர் அமல்படுத்த வேண்டும்.இல்லை என்றால் புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநரை மத்திய அரசு நியமிக்க வேண்டும் எனவும் போராட்டக் குழுவினர் வலியுறுத்தினர்.