Skip to main content

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு இல்லை! கடலூரில் கண்காணிப்பில் 52 பேர்!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது . அதே சமயம் கடலூர் மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 50 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Puducherry - Cuddalore - corona virus issue

 



புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் "கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது.  இதனால் பல நாடுகள் அந்த வைரஸ் பரவாமல் தடுக்க தக்க முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.  அந்த வகையில் மத்திய அரசு அனைத்து விமான நிலையங்கள்,  துறைமுகங்கள்,  சுற்றுலா பகுதிகள் போன்றவற்றில் தக்க பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிற்குள் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் தற்போது 30 பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  அவர்கள் ஹைதராபாத்,  டெல்லி,  ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ளனர்.  தென்மாநிலங்களில் எந்தவித பாதிப்பும் இல்லை.  கேரளாவில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  புதுச்சேரியில் சந்தேகத்தின் பேரில் 9 பேரை பரிசோதித்து பார்த்தபோது யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே தற்போது புதுச்சேரி,  காரைக்கால், மாஹே,  ஏனாம் ஆகிய பகுதிகளில் யாரும் பாதிக்கப்படவில்லை.

 

Puducherry - Cuddalore - corona virus issue

 



எனினும் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு வழங்கும் ஆலோசனைகளை மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.  புதுச்சேரியில் உள்ள கோரிமேடு அரசு மார்பு நோய் மருத்துவமனை,  ஜிப்மர் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  அதேபோல் ஒவ்வொரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் 10 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து பரிசோதனை ஆய்வகம் ஜிப்மரில் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தனி மனித சுகாதாரம் முக்கியம்.  கைகளை அடிக்கடி கழுவவேண்டும்,  கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது.  தும்மல்,  இருமலின் போது துணியை முகத்தில் வைத்து இருக்க வேண்டும்.  சளி,  தும்மல், இருமல் உள்ளவர்கள் முகக் கவசம் அணிந்துக் கொள்வது நல்லது' என்றார்.

இதனிடையே கொரோனோ வைரஸ் தடுப்பு மற்றும் நோய் கண்காணிப்பு ஒருங்கிணைப்புக்குழு கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.  அதன்பின் செய்தியாளர்கள்களிடம் பேசிய அன்புச்செல்வன்,  " கடலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை.  இருப்பினும் இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள்,  நோய் பரவும் விதம்,  நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் எதன் மூலம் பரவுகிறது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்படும். சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.  பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்.  தகுந்த ஆலோசனைகளை மருத்துவரிடம் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும்" என்றார். 

அதேசமயம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் எம்.கீதா கூறுகையில், " கடலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனோ வைரஸ் தாக்குதல் அறிகுறி எதுவும் இல்லை.  மாவட்டத்தில் தற்போது நிலவும் தட்பவெட்ப வெப்பநிலையில் இந்த வைரஸ் வருவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.  கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில்  கரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டு மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனா,  சிங்கப்பூர்,  இந்தோனோஷியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு திருப்பியவர்களை கண்காணித்து வருகிறோம்.  அவர்கள் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  அதன்படி கடலூர் மாவட்டத்தில் 52 பேர் அவரவரின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அந்த பகுதி சுகாதார செவிலியர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்