"துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிர்வாகத்தை முடக்கும் வேலைகளைப் பார்க்கிறார்"-  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு!

PUDUCHERRY CM NARAYANASAMY PRESS MEET CORONAVIRUS LOCKDOWN PEOPLES

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (10/07/2020) வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "புதுச்சேரியில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. பாதிக்கப்பட்ட நபர்கள் யாரோடு தொடர்பு கொள்கிறார்களோ அவர்களுக்கு வருகிறது. எனவே தான் மக்கள் வெளியே செல்ல வேண்டாம். தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.

தற்போது ஆயிரத்தைத் தாண்டுகிற அளவுக்கு மருத்துவப் பரிசோதனையைச் செய்து வருகிறோம். இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து உடனடியாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளோம், தொடர்ந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் இருந்து வருகிறது. வருகிற ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு உத்தரவு இருக்குமா? இல்லையா? என்ற எண்ணம் உள்ளது. நாம் இந்தக் கடைகளை மூடுவதன் மூலமாக மட்டும் கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. மேலும், வருகின்ற ஞாயிற்றுக் கிழமையன்று முகூர்த்த நாளாக இருக்கிறது. இதனால் மக்கள் அவதியுறுவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு வருகிற ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு உத்தரவு இருக்காது.

எந்தக்கோப்பை அனுப்பினாலும் துணைநிலை ஆளுநர் அதைத் தடுத்து நிறுத்தி மாறாக உத்தரவைப் போட்டு நிர்வாகத்தை முடக்குகிற வேலையைப் பார்க்கிறார். கரோனா நேரத்தில் கூட அதிகாரிகளுக்கு நாங்கள் உத்தரவிட்டால், அந்த உத்தரவை மீறி துணைநிலை ஆளுநர் மறு உத்தரவைப் போட்டு அதிகாரிகளுக்கு குழப்பத்தை விளைவிக்கிறார். ஏழை, எளிய மக்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதி, வீடுகட்டும் திட்டத்துக்கான நிதி, மீனவர்களுக்கான ஓய்வூதியம் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துகிறார். இப்படிப் பல திட்டங்களைத்துணைநிலை ஆளுநர் தடுத்து நிறுத்துவதால் எங்களுடைய அரசால் செயல்பட முடியாத நிலையிலும், அதனை எதிர்த்துப் போராட வேண்டிய நிலையிலும் நாங்கள் இருக்கிறோம். புதுச்சேரிக்கு மனமகிழ் திட்டங்களைக் கொண்டு வரத் தடையாக இருக்கிறார்.

பட்ஜெட்டை பொருத்தவரையில் காலதாமதம் ஏற்படுகிறது. ஒப்புதல் கிடைத்துவிட்டது என்று அதிகாரிகள் கூறினாலும் கூட இதுவரை ஒப்புதலுக்கான உத்தரவு எங்களிடம் வந்து சேரவில்லை. அதற்குப்பிறகுதான் சட்டப்பேரவையைக் கூட்டமுடியும். எங்களால் காலதாமதம் இல்லை. கோப்புகள் பல மாதங்களாக மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதால் தான் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியவில்லை". இவ்வாறு புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

cm narayanasamy PRESS MEET Puducherry video conference
இதையும் படியுங்கள்
Subscribe