puducherry cm narayanasamy discussion with ministers, mlas, at vice speaker residence

Advertisment

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (22/02/2021) மாலை 05.00 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர்நாராயணசாமிக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். தனது அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் கூறுகின்றன.

புதுச்சேரி சட்டப்பேரவை 33 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் மூன்று உறுப்பினர்கள் மட்டும் நியமன உறுப்பினர்கள் ஆவர். புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 26ஆக உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள், தி.மு.க.வின் 2 உறுப்பினர்கள், சுயேச்சை ஒருவர் என மொத்தம் 12 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதேபோல், மூன்று நியமன உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

Advertisment

இதனால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு நீடிக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.