Advertisment

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். இன்று (07/05/2021) பிற்பகல் துணைநிலை ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், என். ரங்கசாமிக்கு தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

இந்த விழாவில், பாஜகவின் பொதுச்செயலாளர் சி.டி. ரவி, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜகசட்டமன்ற உறுப்பினர்கள், என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக பாஜகதலைவர் எல். முருகன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி முதலமைச்சராக நான்காவது முறையாக என். ரங்கசாமி பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், புதுச்சேரியில் ஏற்கனவே அமலில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு விரைவில் வாபஸ் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதனிடையே, புதுச்சேரியில் பாஜகவின் சட்டமன்றக் குழு தலைவராக நமச்சிவாயம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜககூட்டணி 16 சட்டமன்றத் தொகுதிகளைக்கைப்பற்றியது.