டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, இன்று (01/07/2021) மாலை 04.00 மணிக்கு புதுச்சேரி பா.ஜ.க. தலைவர் சுவாமிநாதன் தலைமையில் புதுச்சேரி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள், பா.ஜ.க.வுக்கு ஆதரவளித்த சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நமச்சிவாயம், "ரூபாய் 300கோடியில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய கட்டடம் கட்ட பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம். புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவைக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்குவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஜி.எஸ்.டி. நிலுவையை வழங்குதல், வீடு கட்டும் திட்டத்தில் நிதி உள்ளிட்டவைப் பற்றியும் கோரிக்கை விடுத்தோம்" என்றார்.