"இன்று காலை சட்டமன்றம் கூடும்போது எங்களது முடிவு தெரியவரும்" - முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!  

puducherry assembly cm narayanasamy

புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருந்தனர். ஏற்கனவே ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 ஆகவும், கூட்டணி கட்சியான தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 3 ஆகவும், காங்கிரஸ் ஆதரவு சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என 14 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தனர்.

இதேபோன்று எதிரணியிலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் 7 உறுப்பினர்களும், அ.தி.மு.க.வில் 4 உறுப்பினர்களும், மூன்று நியமன உறுப்பினர்கள் என மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதையடுத்து எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால் பெரும்பான்மையை உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநருக்கு கடிதம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், 'காங்கிரஸ் அரசு இன்று (22.02.2021) மாலை 05.00 மணிக்குள் பெரும்பான்மை நிரூபிக்கஉத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று (22.02.2020) காலை 10.00 மணிக்கு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று சட்டசபை சபாநாயகர் உத்தரவின்பேரில் சட்டப்பேரவைச் செயலாளர் முனுசாமி அறிவித்திருந்தார்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று (21/02/2021) ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் நேரில் வழங்கினார். இதேபோல் தி.மு.க.வைச் சேர்ந்த தட்டாஞ்சாவடி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்த நிலையில், மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ், தி.மு.க மற்றும் காங்கிரஸுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "பெரும்பான்மை நிரூபிப்பது குறித்து, இன்று காலை சட்டமன்றம் கூடும்போது எங்களது முடிவை தெரிவிப்போம்" என்றார்.

இதனிடையே முதலமைச்சர் நாராயணசாமி, தனக்கு வழங்கிய பாதுகாப்பை குறைத்துக் கொண்டுள்ளார். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்புக்காக இரண்டு கார்கள் சென்ற நிலையில், அதில் ஒரு காரை குறைத்துக் கொண்டுள்ளார். இதேபோல் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியும் தனக்கு வழங்கப்பட்ட காரை ஒப்படைத்துள்ளார். இன்று சட்டமன்றம் கூடும்போது காங்கிரஸ், தி.மு.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிய வருகிறது.

cm narayanasamy Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe