
புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று (10.08.2020) வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் உட்பட புதிதாக 254 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.
கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.ஜெ.ஜெயபாலுக்கு 25-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து பட்ஜெட் கூட்டத்தின் இறுதி நாள் கூட்டம் சட்டமன்ற மைய அரங்கில் நடைபெறாமல் திறந்தவெளியில் மரத்தடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு கரோனோ பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் தாயார் ராஜம்மாளுக்கு கரோனோ தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அவரது மனைவி, இரண்டு மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் 9 பேருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டதில் அமைச்சர் கந்தசாமி, அவரது இளைய மகன் விக்னேஷ் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் இருவரும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று ஏற்பட்டு அவர் சிகிச்சையில் உள்ளார். அவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் கமலக்கண்ணனுக்கு சளி தொல்லை ஏற்பட்டது. இதனால் பரிசோதனை செய்யப்பட்டதில் அமைச்சர் கமலக்கண்ணனுக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர் தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று புதிதாக 276 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,900 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 3,532 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,277 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் 96 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மாதத்தில் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும் 100, 150 என இருந்த நிலையில் இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 200, 250 என பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவது கவலை அளிப்பதாக புதுச்சேரி மாநில மக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
