
புதுச்சேரியில் அதிமுகவினர் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தில், தமிழக அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அதிமுகவின் எடப்பாடி அணியைச் சேர்ந்த மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக முழு அடைப்புப் போராட்டத்தை இன்று நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தினால் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டு, தனியார் பேருந்துகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் புறப்பட்ட தமிழ்நாடு அரசுப் பேருந்து ஒன்று முதலியார்பேட்டை காவல்நிலையம் அருகே கல் வீசித் தாக்கப்பட்டது. இதேபோன்று புதுச்சேரியில் இருந்து கடலூர் சென்ற தனியார் பேருந்தும் மரப்பாலம் சந்திப்பில் மர்ம நபர்களால் கல் வீசித் தாக்கப்பட்டது. இதனால் முதலியார்பேட்டை பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்றுவழி இல்லாததால் சாலையில் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.