PUDUCHERRY ADMK PARTY MEETING SASIKALA

Advertisment

புதுச்சேரி மாநில (கிழக்கு) அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் உப்பளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் (கிழக்கு) மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் பரசுராமன், அம்மா பேரவைச் செயலாளர் பாஸ்கர், தேர்தல் பிரிவுச் செயலாளர் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அழிக்க முடியாத மாபெரும் இயக்கமாக அ.தி.மு.க. வளர்ச்சியடைய காரணமான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவருக்கும் புதுச்சேரி அ.தி.மு.க. சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா தேர்தலில் குறைந்த வாக்கு சதவீத அளவில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்திருந்தாலும், அ.தி.மு.கவின் அசுர வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மீண்டும் கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் அ.தி.மு.கவை கைப்பற்றி தனது குடும்ப சொத்தாக மாற்ற வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில் சசிகலா கேள்வியும் நானே! பதிலும் நானே! என்ற விதத்தில் தினந்தோறும் தொண்டர்களிடம் பேசுவதாக வீண் விளம்பரம் செய்து, கழகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதை புதுச்சேரி அ.தி.மு.க வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் தமிழக சட்டமன்றத் துணைத் தலைவராக அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜு, செயலாளராக கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பது உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.