Public suggestions on gold loan restrictions will be considered says RBI

தங்க நகைகள் அடமானம் வைப்பதில் ரிசர்வ் வங்கி பல்வேறு புதிய நடைமுறைகளை வெளியிட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயல் என்று அரசியல் தலைவர்கள்,பொதுமக்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனிடையே மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனு சு.வெங்கடேசன் எம்.பி. அளித்திருந்தார். இதையடுத்து பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில் நகைக் கடங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது. அதேசமயம் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், புதிய நகைக் கடன் "நகல்" விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பறிக்கிற வகையில் அமைந்திருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

Advertisment

இந்த கடிதத்திற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, “தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே. உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்; இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது; சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும்” என்று பதில் அளித்துள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “ஏற்கனவே நான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து இப்பிரச்சினை மீதான தீர்வைக் கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் போது நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படுமென்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment