Provisional committee set up to govern Indian Wrestling Federation

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தவர் ஒலிம்பிக் மல்யுத்த பதக்க வீரரான சாக்‌ஷி மாலிக். பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள், போராட்டத்திற்குப் பிறகு பிரிஜ் பூஷண் தலைமைப் பதவியிலிருந்து விலகிவிட்ட நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு கடந்த 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

Advertisment

இந்தத் தேர்தலில் பிரிஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான சஞ்சய் சிங் என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மொத்தமுள்ள 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், மல்யுத்த விளையாட்டிலிருந்து தான் விலகுவதாக சாக்‌ஷி மாலிக் அதிரடியாக அறிவித்திருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திருப்பி அளிப்பதாக கடந்த 22 ஆம் தேதி (22-12-23) மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்திருந்தார். மேலும் மல்யுத்த வீரர் விரேந்தர் சிங்கும், சாக்‌ஷி மாலிக்கிற்கு ஆதரவு அளிக்கும் விதமாகத் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தார்.

Provisional committee set up to govern Indian Wrestling Federation

இந்தச்சூழலில், பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைக்கக் கோரி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்கவும், கட்டுப்படுத்தவும் தற்காலிக குழு அமைக்க வேண்டும். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, தொடர்ச்சியாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு முடிவு காண வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை அமைத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்களாக எம்.எம். சோமயா, மஞ்சுஷா கன்வர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர், வீரர் -வீராங்கனைகள் தேர்வு, வங்கிக் கணக்குகளை கையாளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வர் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று (26.12.2023) இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மத்திய அரசு சார்பில் தனக்கு அளிக்கப்பட்ட அர்ஜுனா விருது மற்றும் கேல் ரத்னா விருதை திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்திருந்தார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையை உருவாக்கிய இறைவனுக்கு நன்றி என விரக்தியுடன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.