'சொத்து; படிப்பு; கையில் இருக்கும் ரொக்கம்'- வெளியான முழு தகவல்

'Property; study; cash on hand'

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும் பல்வேறு மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத் தேர்தலான நான்காம் கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் உட்பட மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (13.05.2024) நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 7 ஆவது மற்றும் இறுதி கட்டமாக ஜூன் 1 இல் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத்தாக்கல் செய்தார். அப்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் உடன் இருந்தனர். 3 வது முறையாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. பிரமாணப்பத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 3.02 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதான வருமானம் அவர் பிரதமராக பணிபுரிவதற்காக அளிக்கப்படும் ஊதியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு தங்க மோதிரங்கள் உள்ளது. அந்த மோதிரங்களின் மதிப்பு 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் எனப் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது பிரதமர் மோடியின் கையில் 52,920 ரூபாய் மட்டும் தான் ரொக்க பணம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்தார் எனவும், 1983 ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்றார் என்றும் அவருடைய கல்வித் தகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னிடம் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை எனவும் பிராமணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் மோடி.

modi
இதையும் படியுங்கள்
Subscribe