Propaganda rested; Karnataka election in final stage

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Advertisment

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி 224 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. நாளை மறுநாள் தேர்தல் எனும் நிலையில், இன்றுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை செய்தனர். ஒவ்வொரு கட்சியினரும் புதுவிதமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் உள்துறை அமைச்சர்அமித்ஷா ஊர்வலமாகச் சென்றும் பிரதமர் மோடி 10 கிலோ மீட்டர் தூரம் வரை திறந்த வாகனத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று டெலிவரி பாய் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் சென்று பிரச்சாரங்களை செய்தார். பாஜகவிற்காக அகில இந்திய பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், அண்டை மாநில பாஜக தலைவர்கள் என அனைவரும் கர்நாடகத்தில் பிரச்சாரத்தில் குதித்தனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் - பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவுகிறது. அதோடு அடுத்தாண்டு நாடாளுமன்றத்தேர்தல் வருவதால் காங்கிரஸ், பாஜக என இரு தேசிய கட்சிகளுக்கும் கர்நாடகத் தேர்தல் ஒரு வெள்ளோட்டமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வந்த நிலையில் நாளை மறுநாள் பதிவாகும் வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.