ADVERTISEMENT

“பெண்ணாக இருப்பது குற்றமாகிவிட்டது” - பிரியங்கா காந்தி தாக்கு

03:49 PM Mar 08, 2024 | mathi23

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் செங்கல் சூளை ஒன்று நடத்தி வருகிறார். இந்த சூளையில், 2 சிறுமிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்படப் பலர் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் இரண்டு சிறுமிகளும் வயல்வெளிக்குச் சென்றுள்ளனர். மாலை சென்ற இவர்கள் இரவு வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவர்களது குடும்பத்தினர், வெளியே சென்று தேடி வந்துள்ளனர். அப்போது, அருகே உள்ள மரம் ஒன்றில் 2 சிறுமிகளின் உடல்கள் தூக்குப் போட்ட நிலையில் இருந்தன.

ADVERTISEMENT

இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள், இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், 2 சிறுமிகளின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ADVERTISEMENT

விசாரணையில், செங்கல் சூளை நடத்தி வரும் தொழிலதிபரின் 18 வயது மகன் மற்றும் அவருடைய 19 வயது மருமகன் இருவரும் சேர்ந்து, அந்த 2 சிறுமிகளுக்கு கட்டாயப்படுத்தி மதுபானம் கொடுத்துள்ளனர். இதில் மயக்கமடைந்த சிறுமிகளை, இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னர், இதனை தங்கள் செல்போன் மூலம் வீடியோவாகவும் எடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் தொழிலதிபர் மற்றும் அந்த இளைஞர்கள் 2 பேர் என 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், செங்கல் சூளை தொழிலதிபர் ராம்ரூப் நிஷாத் (48), அவரது மகன் ராஜு (18), மருமகன் சஞ்சய் (19) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரியவந்தது. மேலும், அவர்களின் செல்போனில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு சிறுமிகள் தூக்குப்போட்டு இறந்த நிலையில், அவர்களில் ஒருவரின் தந்தையின் உடலைத் தூக்குப் போட்ட நிலையில் போலீசார் மீட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அடுத்த ஒரு வாரத்திற்குள் அவரது தந்தை மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘கான்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது அந்த சிறுமிகளின் தந்தை ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் சமரசம் செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளும், பெண்களும் நீதி கேட்டால், அவர்களது குடும்பங்களை அழிக்கும் விதியாகிவிட்டது. உன்னாவ், ஹத்ராஸ் முதல் கான்பூர் வரை எங்கு பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டாலும், அவர்களது குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. சட்டம் என்று எதுவும் இல்லாத இந்தக் காட்டில் பெண்ணாக இருப்பது குற்றமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலத்தின் கோடிக்கணக்கான பெண்கள் என்ன செய்ய வேண்டும், அவர்கள் எங்கு செல்ல வேண்டும்?” என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT