Priyanka Gandhi criticized Everyone is afraid of the Prime Minister

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயரை வெளியிடாமல் தொடர்ந்து மெளனம் காத்து வந்தது. அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கும் நேற்று (03.05.2024) மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி போட்டியிட உள்ளார் என்றும் கே.எல்.சர்மா அமேதியிலும் போட்டியிட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisment

அதன்படி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி தனது வேட்புமனுவை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோருடன் சென்று நேற்று (03-05-24) தாக்கல் செய்தார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரேபரேலி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்ததைப் பா.ஜ.க தலைவர்கள் விமர்சனம் செய்து வந்தது. அதில், பிரதமர் மோடி ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி, ராகுல் காந்தியை இளவரசர் என்று விமர்சிக்கிறார். ஆனால், ராகுல் காந்தி ,கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 4,000 கி.மீ தூரம் நடந்து மக்கள் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். என்பதை நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன்.ஆனால், பேரரசர் நரேந்திர மோடி கோட்டைகளில் வாழ்கிறார். நீங்கள் அவரை தொலைக்காட்சியில் பார்த்தீர்களா? அவரது முகம் சுத்தமாக இருக்கிறது. அவரது வெள்ளை குர்தா ஒரு கறை கூட இல்லாமல் எப்போதும் களங்கமற்று இருக்கிறது. அவரது முடி சரியாக இருக்கிறது. உங்கள் உழைப்பை, உங்கள் பண்ணைகளைப் பற்றி அவர் எப்படிப் புரிந்துகொள்வார்? பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வளவு விலை உயர்ந்தது? அல்லது விவசாயிகளின் கஷ்டத்தைப் பற்றி எப்படி அவர் புரிந்துகொள்வார்?

Advertisment

எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்து விட்டது. இதெல்லாம் மோடிக்கு புரியாது. அவர் கோட்டைக்குள் அடைக்கப்பட்டுள்ளார், அதிகாரத்தால் சூழப்பட்டிருக்கிறார், எல்லோரும் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவரை யாரும் எதுவும் சொல்வதில்லை. யாரேனும் குரல் எழுப்பினால், அதை மௌனமாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன” என்று பேசினார்.