Prisoner passed away  ... Police investigation

புதுச்சேரி சிறையில் கைதி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த கைதிகள் 2 பிரிவாகப் பிரிந்து செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 கைதிகள் சிறையில் தற்கொலைக்கு முயன்றனர்.

Advertisment

இந்த சம்பவத்தின் எதிரொலியாகச் சிறை கண்காணிப்பாளர் கோபிநாத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அசோக்குமார்(42) என்பவருக்கு வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரை சிறைத் துறையினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisment

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது சடலம் உடல்கூறு பரிசோதனைக்காகப் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறு பரிசோதனை முடிவில் அசோக்குமார் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவரும். இது குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.