
பிரயாக்ராஜ் மடத்தில் புகழ்பெற்ற சாமியார் நரேந்திர கிரி, மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சாதுக்களின் பேரமைப்பான அகில பாரதிய அஹார பரிஷத்தின் தலைவராக இருந்தவர் நரேந்திர கிரி. இவர் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பகம்பாரி மடத்தில் தங்கியிருந்தார். நேற்று (20.09.2021) மாலை நரேந்திர கிரி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்து போன சீடர்கள், உடனே காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விரைந்துவந்த காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சாமியாரின் அறையில் அவர் எழுதியதாக கருதப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனை முடிவுகள் வந்த பின்னரே சாமியாரின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என அவர்கள் கூறினர். இந்த நிலையில், சாமியாரின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘வெவ்வேறு சாதுக்கள் அமைப்பை ஒன்றாக இணைத்ததில் அவரது பங்களிப்பு முக்கியமானது’ என புகழாரம் சூட்டியுள்ளார். தனது இறப்புக்கு முன்னர் உயில் வடிவில் சாமியார் நரேந்திர கிரி எழுதியிருந்த கடிதத்தில், அவரது முக்கியமான சீடர்களில் ஒருவரான ஆனந்த் கிரியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் இருவருக்குமிடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் மிகுந்த சதி அடங்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)