/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modibiharn.jpg)
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றது. இதில், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவும் அபாயம் இருந்த நிலையில், அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிட்டது. அதன்படி, இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது. தற்போது, அமைதி நிலவி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய தாக்குதல் குறித்தும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். அந்த வகையில், தற்போது பீகார் மண்ணிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். பீகார் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, இன்று (30-05-25) ரோடு ஷோ (வாகணப் பேரணி) நடத்தினார். அதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, “பாகிஸ்தான் ராணுவத்தில் பாதுகாப்பாக ஊடுறுவி வந்த பயங்கரவாதிகளை, நமது படைகள் ஒரே நடவடிக்கையில் மண்டியிட வைத்தது. சில நிமிடங்களிலேயே பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களையும், பயங்கரவாதிகளின் மறைவிடங்களையும் அழிக்கப்பட்டன. இது தான் புதிய இந்தியா, இது தான் புதிய இந்தியாவின் வலிமை.
பஹல்காம் தாக்குதல் நடந்த இரண்டு நாள் கழித்து பீகாருக்கு வந்தேன். பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் தரைமட்டமாக்கப்படும் என பீகார் மண்ணில் இருந்து இந்த நாட்டுக்கு உறுதியளித்தேன். அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினேன். இப்போது, நான் பீகாருக்கு திரும்பியுள்ளேன், என்னுடைய சத்தியத்தை நிறைவேற்றியுள்ளேன். பாகிஸ்தானில் அமர்ந்திருந்து நமது சகோதரிகளின் சிந்தூரத்தை அழித்தவர்களைப் போல, நமது இராணுவம் அந்த பயங்கரவாத மறைவிடங்களை இடிபாடுகளாக மாற்றிவிட்டது. சிந்தூரின் சக்தியை பாகிஸ்தானும், இந்த உலகமும் பார்த்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் வலிமையை எதிரிகள் கண்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் நிறுத்தப்படவும் இல்லை முடியவும் இல்லை. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால், இந்தியா அதை மீண்டும் நசுக்கும்” என்று ஆவேசமாகப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)