பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகராக இருந்த பிபேக் டெப்ராய்(69), குடல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை 7 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘டாக்டர். பிபேக் டெப்ராய் ஒரு உயர்ந்த அறிஞராக இருந்தார். பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம் மற்றும் பல துறைகளில் நன்கு அறிந்தவர். அவரது படைப்புகள் மூலம், அவர் இந்தியாவின் அறிவுசார் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்தார். பொதுக் கொள்கையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால், நமது பழங்கால நூல்களை இளைஞர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதில் அவர் மகிழ்ந்தார்.
எனக்கு பல வருடங்களாக டாக்டர் டெப்ராய் தெரியும். அவரது நுண்ணறிவு மற்றும் கல்விச் சொற்பொழிவு மீதான ஆர்வத்தை நான் அன்புடன் நினைவில் கொள்கிறேன். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி’ எனப் பதிவிட்டுள்ளார்.