Advertisment

வாக்கு ஜிகாத்தா? ராம ராஜ்ஜியமா? - பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு!

Prime Minister Modi's controversial speech in madhya pradesh

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அந்த வகையில், மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், மே 7 வரை மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், மே 13ஆம் தேதி அன்று நான்காவது கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடைபெறும் இந்தத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம், கர்கோன் மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று (07-05-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியா கூட்டணிக் கட்சியினர், மக்களின் தலைவிதியைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் தங்கள் வம்சத்தை காப்பாற்ற தேர்தலில் போராடுகிறார்கள். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். மேலும், இங்கு காங்கிரஸில் உள்ளவர்களும், மோடிக்கு எதிராக ஜிகாத் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அதாவது குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மோடிக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காங்கிரஸ் எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று கற்பனை செய்து பாருங்கள்.

வாக்கு ஜிகாத் என்ற கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இது ஜனநாயகத்தில் வேலை செய்ய முடியுமா? இந்திய அரசியல் சட்டம் இதை அனுமதிக்கிறதா? இதைப் புரிந்து கொள்ள, 20-25 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டர்களாகவும், தலைவர்களாகவும் இருந்து, இப்போது கட்சியை விட்டு வெளியேறும் நபர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். ஒரு பெண் தலைவர், சமீபத்தில் ராமர் கோயிலுக்குச் சென்ற பிறகு, காங்கிரஸை விட்டு வெளியேற வேண்டிய அளவுக்கு துன்புறுத்தப்பட்டதாகக் கூறினார். தேச விரோத அறிக்கைகளை வெளியிடுவதில் காங்கிரஸ் கட்சியினரிடையே போட்டி நிலவுகிறது.

நான் காங்கிரஸ் இளவரசரிடம் கேட்கிறேன். பாகிஸ்தான் மீது ஏன் இவ்வளவு அன்பும், நமது ராணுவத்தின் மீது இவ்வளவு வெறுப்பும் ஏன்? பாகிஸ்தானின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் வைப்புத்தொகையைச் சேமிப்பது கடினமாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மக்களின் வாக்கு, இந்தியாவை உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. 370 வது பிரிவை ரத்து செய்ய வழிவகுத்தது. ஒரு பழங்குடிப் பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக்கியது. உங்கள் வாக்கு 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை அமைப்பதற்கான 500 ஆண்டுகால காத்திருப்புக்கு உங்கள் வாக்கு மூலம் முடிவு கிடைத்துள்ளது. இந்தியா வரலாற்றில் ஒரு திருப்புமுனையில் உள்ளது. வாக்கு ஜிகாத் பலிக்குமா? அல்லது ராம ராஜ்ஜியமா? என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்” என்று கூறினார்.

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe