Skip to main content

பிரதமர் மோடி நாளை பெங்களூரு வருகை

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

Prime Minister Modi will visit Bengaluru tomorrow

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.

 

நேற்று முன்தினம் மாலை லேண்டர் நிலவின் தென் பகுதியில் இறங்கிய நிலையில், லேண்டரில் இருக்கும் ரோவர் எப்போது வெளியே வந்து அதன் ஆய்வினைத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் உலக நாடுகளில் உள்ள பல விண்வெளி ஆய்வு மையங்கள் உற்றுநோக்கிக்கொண்டு இருந்த நிலையில் நேற்று இரவு 9 மணியிலிருந்து லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வுக்கான தனது பயணத்தை நிலவின் தென் துருவத்தில் தொடங்கியுள்ளது. இதனை, ‘நிலவின் மேற்பரப்பில் ஆய்வைத் தொடங்கியது இந்தியா’ என இஸ்ரோ தெரிவித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரிலிருந்து இறங்கிய பிரக்யான் ரோவர் உள்ளிட்ட மூன்று கருவிகளின் இயக்கமும் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. நிலவு அதிர்வை அளவிடும் கருவி, நிலவின் சுற்றுச்சூழலை ஆய்வு செய்யும் கருவி, வெப்ப இயற்பியல் பரிசோதனைக் கருவி எனும் மூன்று கருவிகள் செயல்பாடும்  தற்போது தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் நிலவில் தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் 8 மீட்டர் பயணித்துள்ளது. ரோவரின் முக்கிய பகுதிகளான எல்ஐபிஎஸ் (LIBS), எபிஎக்ஸ்எஸ் (APXS) ஆகியவை செயல்படத் தொடங்கியுள்ளன. லேண்டர், உந்து விசைக்கலன், ரோவர் ஆகியவை திட்டமிட்டபடி சிறப்பாக செயல்படுகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்ற 15 வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி தற்போது கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கிரீஸ் நாட்டில் இருந்து இந்தியா திரும்பும் மோடி நாளை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சந்திரயான் - 3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளை சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதுடன் விஞ்ஞானிகளுடன் உரையாட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.