கோப்புப்படம்
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக இன்று (23.07.2025) பிரிட்டன் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு அந்நாட்டின் பிரதமர் கியார் ஸ்டார்மர் மற்றும் பிரிட்டன் அரசர் 3ஆம் சார்லஸ் ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று (22.07.2025) ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் தோல் பொருட்கள், காலணிகள் மற்றும் ஆடைகள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி வரியை ரத்து செய்ய உதவும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகும் மதுபானங்கள் மற்றும் கார்களின் இறக்குமதி வரியையும் குறைக்கப்பட உள்ளது தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்குமிடையேயான பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்வது 4வது முறையாகும். அதே சமயம் பிரிட்டன் பிரதமராக கியார் ஸ்டார்மர் பதவியேற்றபிறகு பிரதமர் மோடி பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்வது இது முதல் முறையாகும். பிரமதர் மோடி பிரிட்டன் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 25ஆம் தேதி மாலத்தீவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.