Skip to main content

“நான் கூறியதுதான் நடந்திருக்கிறது” - பிரதமர் மோடி சாடல்

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
Prime Minister Modi says What I said happened

நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயரை வெளியிடாமல் தொடர்ந்து மெளனம் காத்து வந்தது. இதற்கிடையில் அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இத்தகையச் சூழலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியும், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிட வேண்டும் எனக் காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதே சமயம் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இன்று (03.05.2024) மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. நான்காம் கட்டமாக மே 20 ஆம் தேதி இந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி போட்டியிட உள்ளார் என்றும் கே.எல்.சர்மா அமேதியிலும் போட்டியிட உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி தனது வேட்புமனுவை இன்று (03-05-24) தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த போது அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் உடன் இருந்தனர். இந்த மக்களவைத் தேர்தலில், ஏற்கெனவே கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரேபரேலி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்ததைப் பா.ஜ.க தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம், பர்தாமன் - துர்காபூர் பகுதியில் இன்று (03-05-24) பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “வயநாட்டில் தோற்கப் போகிறார் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வேறு சீட் தேட ஆரம்பிப்பார் என்று சொல்லியிருந்தேன். அமேதிக்கு பயந்து ரேபரேலியை நோக்கி ஓடுகிறார். பயப்படாதீர்கள். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தலைவர் தேர்தலில் போட்டியிடத் துணியமாட்டார், அவர் ஓடிவிடுவார் என்று நான் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் கூறியிருந்தேன். ராஜஸ்தானுக்கு ஓடிப்போய் ராஜ்யசபாவுக்கு வந்தார்” என்று பேசினார். 

சார்ந்த செய்திகள்