Advertisment

‘முன்களப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி’... பிரதமர் மோடி!

modi.jpg

Advertisment

கரோனா பரவலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ‘கோவிஷீல்ட்’, ‘கோவேக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது .

அதன்படி தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (16/01/2021) தொடங்கி வைத்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘நீங்கள் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்த தடுப்பூசி வந்துவிட்டது. பொதுவாக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால் மிகவும் குறைந்த காலகட்டத்தில், அதுவும் ஒன்றல்ல, இரண்டு தடுப்பு மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. பிற தடுப்பூசிகளுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற பெரிய தடுப்பூசி வழங்கும் திட்டம் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்ததில்லை. 3 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்தியோவோ முதற்கட்டத்தில் மட்டும் 3 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தவிருக்கிறது. இரண்டாம் கட்டத்தில் 30 கோடி மக்களுக்குத் தடுப்பூசி வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். இரண்டாம் டோஸுக்குப் பிறகுதான் எதிர்ப்புசக்தி உருவாகும் என்பதால் முதல் டோஸ் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவுடன் முகக் கவசத்தை நீக்குவது, தனிமனித இடைவெளியை மறந்துவிடுவது போன்ற தவறுகளை செய்ய வேண்டாமென மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

Advertisment

கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும்போது, தனிமனிதனாக, குடும்பமாக, ஒட்டுமொத்த தேசமாக நாம் நிறைய கற்றுக்கொண்டோம் என்பதை நம்மால் உணர முடியும். இந்த நோய், பலரை தங்கள் குடும்பத்திடம் இருந்து பிரித்திருக்கிறது. தாய்மார்கள் குழந்தைகளைப் பிரிந்து அழுதிருக்கிறார்கள்; மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை சந்திக்க முடியாமல் தவித்திருக்கிறார்கள்; உயிரிழந்தவர்களுக்கு முறையான இறுதிசடங்குகள் கூட நம்மால் செய்ய முடியவில்லை.

கரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது. சீனாவில் சிக்கிய தம் குடிமக்களைக் காப்பாற்ற, பிற நாடுகள் தவித்தபோது, நாம் இந்திய குடிமக்களை மட்டுமல்லாது, ‘வந்தே பாரத் மிஷன்’க்கு உட்பட்ட நாடுகளின் குடிமக்களையும் மீட்டுக் கொண்டு வந்தோம்.

கடினமான சூழ்நிலையிலும் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு, பாராசிட்டமால், ஹைட்ரோ க்ளோரோ குயின் உள்ளிட்ட மருந்துகளை அனுப்புவது போன்றமருத்துவ உதவிகளைஇந்தியா செய்திருக்கிறது. நம்மால் முடிந்த அளவிலான அனைத்து உதவிகளையும் பிற நாடுகளுக்கு செய்திருக்கிறோம்.

தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டாலும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற கரோனா வழிகாட்டுதல்களை மக்கள் மறந்துவிடக் கூடாது.இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவைதான், வதந்திகளை நம்பாதீர்கள். இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை உலகமே வியந்து பாராட்டுகிறது. முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கான மொத்த செலவையும் அரசே ஏற்கும். நாட்டு மக்களின் நலனுக்காக உழைக்கும் முன்களப் பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி வழங்கப்படும்.’ என்று மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி.

Narendra Modi coronavirus vaccine
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe