Advertisment

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்; மெளனம் கலைத்த பிரதமர் மோடி!

Prime Minister Modi broke the silence about Prajwal Revanna Video Affair

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பதுபோன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

Advertisment

இந்தப் புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டு இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதன்படி பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகாரைத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இத்தகைய சூழலில் ஆபாச வீடியோக்கள் தொடர்பான புகாரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு தணிக்கைக் குழு புதியதாக வழக்கைப் பதிவு செய்தது. அதோடு ஹொலேநரசிபுராவில் உள்ள வீட்டிலேயே தன்னை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் பெண் கவுன்சிலர் புகார் அளித்திருந்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமைக்கான சட்டப்பிரிவும் எஃப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2 வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்க வேண்டும் எனக் கார்நாடக மாநில சிறப்பு புலானாய்வுக் குழு (S.I.T) கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.

Prime Minister Modi broke the silence about Prajwal Revanna Video Affair

இந்த நிலையில், பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவரை தண்டிக்க அனைத்து சட்ட வழிகளும் உகந்ததாக பயன்படுத்தப்பட வேண்டும். 2,000, 3,000 அல்லது 5,000 வீடியோக்கள் அல்லது எதுவாக இருந்தாலும், ஒரே நாளில் நடைபெறவில்லை. காங்கிரஸ், ஜேடிஎஸ் உடன் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நடந்த குற்றம் என்றுதான் உணர்த்துகிறது. இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை. வங்காளத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் அதற்கு வங்காள அரசுதான் பொறுப்பு. குஜராத்தில் நடந்திருந்தால் அதற்கு குஜராத் அரசுதான் பொறுப்பு. கர்நாடகாவில் நடந்திருந்தால் கர்நாடக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோடியைப் பொறுத்த வரை, பாஜகவைப் பொறுத்த வரை, நமது அரசியல் சாசனத்தைப் பொறுத்த வரை, அப்படிப்பட்டவர்களிடம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அனைத்து சட்ட வாய்ப்புகளையும் பயன்படுத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட பின்னர் வீடியோக்களும் வெளியிடப்பட்டன. இது மிகவும் சந்தேகத்திற்குரியது. உங்களுக்கு தகவல் கிடைத்திருந்தால், அவர்கள் கண்காணித்திருக்க வேண்டும், விமான நிலையத்தில் கண்காணிப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எதையும் செய்யவில்லை, மத்திய அரசிடமும் தெரிவிக்கவில்லை. இதன் பொருள் இது ஒரு அரசியல் தந்திரம். இந்தக் காணொளிகள் அவர்கள் கூட்டணியில் இருந்த காலத்திலிருந்தது என்பது அவர்களுக்குத் தெரியும். எந்தக் குற்றவாளியும் தப்பக்கூடாது என்பதே என் பிரச்சினை. இதை நம் நாட்டில் நிறுத்த வேண்டும். அவரை மீட்டு, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

karnataka modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe