காஷ்மீரில் முழங்கிய பிரதமர்; சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் பயணம் 

 Prime Minister in Kashmir and First trip after cancellation of special status

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வழங்கியது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றார். விமானம் மூலம் காஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், ஸ்ரீநகர் பஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜம்மு - காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய காஷ்மீருக்காகபல ஆண்டுகளாக காத்திருந்தோம். காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும். மக்கள், ஜம்மு - காஷ்மீர் வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும். இப்போது, உலகம் முழுவதும் உள்ள பெரிய பிரபலங்களும் ஜம்மு காஷ்மீருக்கு தைரியமாக வருகிறார்கள்” என்று கூறினார்.

kashmir modi
இதையும் படியுங்கள்
Subscribe