Prime Minister congratulates athletes who won medals in Asian Games

Advertisment

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல்முறையாக 100 பதக்கங்களுக்கு மேல் வென்று சாதனை படைத்துள்ள நிலையில், பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவின்ஹாங்சோவ் நகரில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றதோடு, தொடர்ந்து பதக்க வேட்டை நடத்தி வருகிறது.

28 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றிருந்த நிலையில், தற்போது 103 பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த நிலையில், பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது சமூக வலைத்தள பதிவில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மிகப்பெரிய சாதனை. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் சரித்திரம் படைத்து நமது இதயங்களை பெருமையால் நிரப்பியுள்ளனர். வரும் 10 ஆம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டவர்களுடன் கலந்துரையாட ஆவலுடன் இருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.