Skip to main content

"முழு நாடும் அவர்களுக்கு தலை வணங்குகிறது" - குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரை...

Published on 14/08/2020 | Edited on 15/08/2020

 

gg

 

நாளை இந்தியாவின் 74 -ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாட்டின் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, கொண்டாட்டங்களின் போது பொதுமக்கள் சமூக விலகலை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர் பலரும் மக்களுக்குச் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்தவகையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "மூவர்ண கொடியைப் பறக்க விடும் ஆகஸ்டு 15 -ஆம் நாள் நம்முள் பரவசம் நிரம்புகிறது. நாம் கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறோம். தேசப்பற்று பாடல்களைக் கேட்கிறோம். சுதந்திரம் பெற்ற இந்தியாவின் குடிமகன்கள் என்ற சிறப்பு பெருமையை நாட்டிலுள்ள இளைஞர்கள் உணர வேண்டும். நம்முடைய விடுதலை இயக்கத்திற்கு வழிகாட்டும் ஒளியாக மகாத்மா காந்தி இருந்ததற்கு நாம் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் ஆவோம்.

 

உலகம் உயிர்க்கொல்லி வைரசை எதிர்கொண்டுள்ளது. அது அனைத்து நடவடிக்கைகளையும் முடக்கி பெருமளவில் உயிர்களைப் பலி கொண்டுள்ளது. தொற்றுக்கு முன் நாம் வாழ்ந்த உலகை அது மாற்றியுள்ளது. வைரசுக்கு எதிரான போரில் முன்னணியில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு தேசம் கடன்பட்டு உள்ளது. நமது எல்லைகளைக் காப்பதில் வீரம் நிறைந்த நம்முடைய சிப்பாய்கள் உயிரிழந்து உள்ளனர். பாரத மாதாவின் உயரிய மகன்களான அவர்கள் தேசத்தின் பெருமைக்காகவே வாழ்ந்து, மறைந்து உள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக முழுநாடும் தலை வணங்குகிறது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும்' - எழும் கோரிக்கை

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Mani Mandapam for Kodikatha Kumaran - the demand that arises

கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் வேண்டும் என கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமுதாய அமைப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகில் உள்ள மேலப்பாளையம் என்னும் கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக குமரன் பிறந்தார். இவருடைய இயற்பெயர் குமாரசாமி.

தன் குடும்பத்தின் வறுமை சூழ்நிலை காரணமாகப் பள்ளிப் படிப்பை ஆரம்பப் பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். பின்னர் அவர் கைத்தறி நெசவு தொழிலை செய்து வந்தனர். 1923ல் ராமாயி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்று அங்கு இருக்கும் ஈஞ்சையூரில் ஒரு மில்லில் எடை போடும் வேலையில் சேர்ந்தார்.

திருப்பூரில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய சிப்பாய்களால் அடிபட்டு கையில் இந்திய தேசியக் கொடியுடன் மயங்கி விழுந்து இறந்ததால் இவருக்கு கொடி காத்த குமரன் என்ற பெயர் வந்தது. இவருக்கு சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக  சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது. இதுகுறித்து செங்குந்த மகாஜன சங்க தலைவர் நந்தகோபால் மற்றும் செயலாளர் ஆசை தம்பி ஆகியோர் கூறும்போது, "அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த கொடிகாத்த குமரனுக்கு மட்டும் அரங்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  தேச விடுதலைக்காகப் போராடிய கொடி காத்த குமரனுக்கு மணிமண்டபம் அவர் பிறந்த சென்னிமலையில் கட்ட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னிமலையில் விரைவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

Next Story

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Two days holiday for schools in Puducherry

 

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழா ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் அறுபது ஆண்டுகால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 1ஆம் தேதியை புதுவை மாநில அரசு தங்களின் விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.  1673 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் முதன் முதலில் காலூன்றியதும், அதே ஆண்டில் தங்களின் வணிகத்தை துவங்கிய இடம் புதுச்சேரிதான். அதன் பிறகு 1721 ம் ஆண்டு மாஹியையும், ஏனாமையும், காரைக்காலையும், சந்திரனாகூரையும் அடுத்தடுத்து தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

 

இந்தியா முழுவதும் பல்வேறு கோணங்களில் விடுதலைப் போராட்டங்கள் எழுந்து கிளர்ச்சியை உண்டாக்கியதால் 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு மட்டும் சுதந்திரம் அளித்தனர். ஆனால் புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சுக்காரர்களும் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று புதுச்சேரியிலும் போராட்டம் வெடித்தது. அதன் காரணமாக புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது.  

 

புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்து விட்டதால் இந்தியாவின் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மறுநாள் 16-ம் தேதியை புதுச்சேரியின் சுதந்திர தினமாக புதுச்சேரி அரசு கொண்டாடி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் பல அறுபது ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தினர், தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக, நவம்பர் 1ம் தேதியை புதுச்சேரி விடுதலை நாளாக கொண்டாட அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பயனாக நவம்பர் 1-ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாளாக அறிவிக்கப்பட்டு அன்றைய தினம் அரசு விடுமுறை நாளாக அறிவித்து சுதந்திரத்தை கொண்டாடி வருகின்றனர். வருடா வருடம் புதுச்சேரி விடுதலை தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாளை நவ.1 மற்றும் 2 தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .