the President's agony says I was dismayed about The issue of mimicry for vice president

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்கு பின்பு இதுவரை 141 எம்.பி.க்கள் மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (19-12-23) காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணைத்தலைவருமான ஜகதீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதைப் போல், அனைவரின் முன்னிலையில் நடித்துக் காட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது செல்போனில் அந்த காட்சியை வீடியோ எடுத்தார். ஜகதீப் தன்கரை போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நடித்துக் காட்டிய காட்சியையும், அதனை ராகுல் காந்தி வீடியோவாக எடுத்த காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு ஆளும் கட்சியான பா.ஜ.க எம்.பி.க்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று (20-12-23) காலை மாநிலங்களவை கூடியது. அப்போது, நேற்று நடந்த சம்பவம் குறித்து வேதனையை வெளிப்படுத்தினார். அப்போது அவர், “தனிப்பட்ட ஜகதீப் தன்கரை எவ்வளவு அவமானப்படுத்தினாலும், அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், இந்திய துணை குடியரசுத் தலைவரை, விவசாயிகள் சமூகத்தை, என் சமூகத்தை அவமதிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த சபையின் கண்ணியத்தைக் காப்பது எனது கடமை” என்று கூறினார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து, துணை குடியரசுத் தலைவரை போன்று எம்.பி. நடித்துக் காட்டிய வீடியோவை பார்த்து மனம் நொந்து போனதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்துஅவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “நாடாளுமன்ற வளாகத்தில் நமது மதிப்பிற்குரிய குடியரசுத் துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தை பார்த்து மனம் நொந்து போனேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும். அது கண்ணியமாகவும், மரியாதையாகவும் இருக்க வேண்டும். அதுதான் நம் நாடாளுமன்றத்தின் பாரம்பரியம். அதை எம்.பி.க்கள் நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.