சோனியா காந்தி கருத்தால் சர்ச்சை; ஜனாதிபதி மாளிகை விளக்கம்!

 Presidential Palace explains on Controversy over Sonia Gandhi's comments

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31.01.2025) காலை 11 மணிக்குத் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் பணியின் வேகம் மும்மடங்காக உயர்ந்துள்ளதாகவும், அனைத்து துறைகளிலும் அரசு சாதனை குறித்தும் தனது ஒரு மணி நேர உரையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விவரித்து பேசினார். ஒரே நாடு ஒரே தேர்தல், வக்ஃப் வாரியங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு முடிவுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் ஜனாதிபதி உரை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “ஜனாதிபதி பேச்சு சலிப்பை ஏற்படுத்துகிறது” என்று பதிலளித்தார். இதை கேட்டதும் சோனியா காந்தி, “ஜனாதிபதி இறுதியில் மிகவும் சோர்வடைந்து விட்டார். அவரால் பேச முடியவில்லை, பாவம்” என்று கூறினார்.

மாநிலங்களவை உறுப்பினர் சோனியா காந்தி, ஜனாதிபதி குறித்து பேசிய கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவரை சோனியா காந்தி அவமதிப்பதாகக் கூறி பா.ஜ.க கண்டனம் தெரிவித்தது. சோனியா காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஜனாதிபதி ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆனால் காங்கிரஸின் அரச குடும்பம் அவரை அவமதிக்க முயன்றது. ஜனாதிபதியைப் பற்றிய சோனியா காந்தி கருத்துக்கள் மூலம் பழங்குடி மக்களை அவமதிக்கிறார்” என்று கூறினார்.

இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து கூறியதாவது, ‘ஜனாதிபதி எந்த நேரத்திலும் சோர்வடையவில்லை. உண்மையில், விளிம்புநிலை சமூகங்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்காக, அவர் உரையாற்றும் போது பேசியது சோர்வாக இருக்காது என்று அவர் நம்புகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

budget President
இதையும் படியுங்கள்
Subscribe