Skip to main content

“போட்டி என்பது வாழ்க்கையை அழகுபடுத்தும்” - நீட் தேர்வு குறித்து குடியரசுத் தலைவர்

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

President says Competition makes life beautiful about NEET exam

 

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தீர்மானத்தின் மீதான மசோதாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அந்த மசோதா தொடர்பாக எந்தவித பதிலும் தரவில்லை என்று கூறப்பட்டது. அதன் பின்பு மீண்டும் இரண்டாவது முறையாகச் சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா நீண்ட தாமதத்திற்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இதுவரை ஒப்புதல் தரவில்லை என்று பலர் குற்றம் சாட்டி வந்தனர். இதற்குப் பதில் அளித்த குடியரசுத் தலைவர், நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நீட் தேர்வுக்காகப் படித்து வந்த மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். 

 

சட்டீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் நேற்று நடந்த மாநில அளவிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. போட்டி என்பது வாழ்க்கையை அழகுப்படுத்தும் ஒரு நேர்மையான உணர்வாகும். வெற்றியும், தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதியாகும். இந்த இளைஞர்களின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற உதவுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

 

போட்டி, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதை நேர்மறையான சிந்தனையின் மூலம் எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். மற்றவர்களிடமிருந்து உத்வேகத்தை பெறுவது நல்லது. ஆனால், ஒருவரின் உள்ளுணர்வுடன் தொடர்பு கொள்வது அவசியம். இந்த விஞ்ஞான உலகத்தில், புத்திசாலித்தனமான மாணவர்கள் மனரீதியாக இன்னும் வலுவாக இருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகள் நம் வாழ்க்கையையும், நம் அருகில் உள்ளவர்களின் வாழ்க்கையையும் சீர்குலைத்து விடும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? - தொல்.திருமாவளவன் காட்டம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
President Draupadi Murmu was made to stand while presenting the award to Advani

இந்தியாவில் சிறந்த குடிமக்களுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதாவது அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு (2024) பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்களான சரண் சிங், நரசிம்மராவ் மற்றும் இந்தியாவின் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி குடியரசுத் தலைவர் இல்லத்தில் நேற்று முன்தினம் (30.03.2024) நடைபெற்ற விழாவில் கர்பூரி தாக்கூர், சரண் சிங், நரசிம்மராவ், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரின் குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, அத்வானியின் உடல் நலனை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (31.03.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு மற்றும் அத்வானியின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்வின்போது அத்வானி அருகில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பது போன்றும், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மட்டும் நிற்பது போன்று புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த விசிக தலைவர் திருமாவளவன், “பிரதமர், மேனாள் துணைப் பிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா?  

தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா? இந்த அவமதிப்பு- இவர் பெண்மணி என்பதாலா? அல்லது  இவர் பழங்குடி என்பதாலா? அல்லது  அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா? குடியரசுத் தலைவரை நிற்க வைத்து படம்பிடித்து வெளியிடுவது என்ன வகை பண்பாடு?  பெரும் அதிர்ச்சியளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், பாஜக ஆட்சியின் கீழ் எங்கள் குடியரசு தலைவர் மீது காட்டப்படும்   அவமரியாதை வருத்தமளிக்கிறது. நமது தேசத்தின் அரசியலமைப்புத் தலைவரைக் கூட சாதி மற்றும் பாலினப் பாகுபாடு எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு அப்பட்டமான சான்றாக விளங்குகிறது” விமர்சித்துள்ளார்.