இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று (06.07.2021) சில மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தும், ஏற்கனவே பதவியில் இருக்கும் சில ஆளுநர்களை இடம் மாற்றியும் உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது மத்திய சமூகநீதித்துறை அமைச்சராக இருந்துவரும் தவார்ச்சந்த் கெஹ்லோட், கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மிசோரத்தின் ஆளுநராக டாக்டர் ஹரி பாபு கம்பம்பதியும், மத்தியப் பிரதேச ஆளுநராக மங்குபாய் சாகன்பாய் படேலும், இமாச்சலப் பிரதேச ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மிசோரம் மாநில ஆளுநராக பணியாற்றிவந்த ஸ்ரீதரன் பிள்ளை, கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநில ஆளுநராக இருந்துவந்த சத்யதேவ் நாராயண் ஆர்யாவை திரிபுராவின் ஆளுநராக நியமித்துள்ள குடியரசுத் தலைவர், திரிபுராவின் ஆளுநராக இருந்துவந்த ரமேஷ் பைஸை ஜார்க்கண்ட்டின் ஆளுநராக நியமித்துள்ளார். இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்துவரும் பண்டாரு தத்தாத்ரயா, ஹரியானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.