/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/president ram nath.jpg)
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நேற்று (26/03/2021) காலை, லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனையடுத்து, மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத்தலைவரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடியரசுத்தலைவரின் உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் குறித்து அவரது மகனிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அதேபோல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.இந்த நிலையில், குடியரசுத்தலைவரின் உடல்நிலை குறித்து குடியரசுத்தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (27/03/2021) மதியம் ராணுவ மருத்துவமனையில் இருந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு மார்ச் 30- ஆம் தேதி அன்று காலை இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் எய்ம்ஸ் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)