President draupadi murmu refused to meet Puducherry Congress MLA

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 4 நாள் பயணமாகப்பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்குத்தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்திருந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு புதுச்சேரி சென்றஅவரை புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். 2 நாள் சுற்றுப்பயணமாகப் புதுச்சேரி நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் தங்கி இருந்த குடியரசுத் தலைவரை நேற்று காலை 9 மணி முதல் 10 மணி வரை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையிலான தி.மு.க எம்.எல்.ஏக்கள் மற்றும் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகன் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்தனர். மேலும், அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.

Advertisment

அதன்படி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ, குடியரசுத் தலைவரை சந்திக்க வந்தார். குடியரசுத் தலைவரை சந்திக்க வந்த வைத்தியநாதன் நேற்று காலை 8:30 மணி அளவில் இருந்து காத்திருந்தார். அவரை வெகுநேரம் காத்திருப்பு அறையில் தங்க வைத்த பின்பு திடீரென்று அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் குடியரசுத் தலைவரை சந்திக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

Advertisment

இதுகுறித்து வைத்தியநாதன் எம்.எல்.ஏ கூறுகையில், “புதுச்சேரி மாநில அந்தஸ்து, மாநிலத்தின் பல்வேறு முக்கிய பிரச்சனைகள், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் மனு கொடுக்க வந்தேன். நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ என்பதால் என்னை சந்திக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்டபோது குடியரசுத் தலைவர் முடிவு பண்ணுவது எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி அனுப்பிவிட்டனர்” என்று கூறினார்.

இதேபோல், உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ நேரு (எ) குப்புசாமி தலைமையில் சமூக அமைப்புகள், இயக்கங்களின் நிர்வாகிகள் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தனர். காத்திருப்பு வளாகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து எம்.எல்.ஏ நேரு கூறுகையில், “என்னைத்தவிர வேறு யாருக்கும் சந்திக்க அனுமதி இல்லை. எங்களை சந்திக்க விரும்பாவிட்டாலும் பரவாயில்லை, எங்களுடைய கோரிக்கை மனுவையாவது குடியரசுத் தலைவரிடம் சேர்த்து விடுங்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்டோம். ஆனால், எங்களுக்கு மரியாதை இல்லை என்று இதன் மூலம் தெளிவாகி உள்ளது” என்று கூறினார்.

Advertisment