சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர். 

அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார். இன்றும் நான்காவது நாளாக விசாரணையானது நீதிபதி ஜான் சுந்தர் தலைமையில் தொடங்கியது. இன்றைய விசாரணையில் திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் உள்ளிட்டோரிடம் நீதிபதி ஜான் சந்தர் விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில், அஜித்குமார் படுகொலையை கண்டித்து சிவகங்கையில் தேமுதிக சார்பில் இன்று (05-07-25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று பேசினார். அதனை தொடர்ந்து அஜித்குமார் குடும்பத்தினரை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். சும்மா கண் துடைப்பு நாடகமாக சிபிஐக்கு மாற்றி விட்டோம் என்று கூறக்கூடாது. இந்த சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும். சிபிசிஐடி-யோ, சிபிஐ-யோ யாராக இருந்தாலும் உண்மை நிலை துரிதமாக கண்டுபிடிக்கப்பட்டு தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

முதல்வர் வீட்டுமனை கொடுப்பதாலோ, வேலை வழங்குவதாலோ போன உயிர் வந்துவிடுமா? சாரி (Sorry) சொன்னால் மட்டும் போதுமா? அக்கறையில் தான் அவர் சாரி சொல்கிறார். அதை நாங்கள் தவறாக கூறவில்லை. இனியும் இது மாதிரியான மரணம் தமிழ்நாட்டில் நடக்கக் கூடாது. இதற்கு முதல்வர் கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.