ADVERTISEMENT

“பள்ளி கல்லூரிகளில் தினமும் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்க வேண்டும்” - கர்நாடக அரசு

03:45 PM Sep 15, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சர்வதேச ஜனநாயக தினமான இன்று(15.9.2023), கர்நாடக சட்டசபை இயங்கும் விதான சவுதாவில் இந்திய அரசியலமைப்பின் முகப்புரை வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதில், கர்நாடக முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டு முகப்புரையை வாசித்தார். அவருடன், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், அமைச்சர்கள் ஜி பரமேஸ்வரா, ராமலிங்க ரெட்டி, ஈஷ்வர் காந்த்ரே, கேஜே ஜார்ஜ் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத் ஆகியோரும் பங்கேற்று வாசித்தனர்.

அரசியல் அமைப்பு வாசிப்பு நிகழ்வை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்து பேசுகையில், “உலகின் அனைத்து நாடுகளும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. ஏன், கௌதம புத்தர் காலத்திலும் ஜனநாயகம் இருந்துள்ளது. நமது அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தான் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். மேலும், நமது காங்கிரஸ் அரசு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் வழியே செயல்படுகிறது. எனவே நாம் அரசியலமைப்பு சட்டத்தை அறிந்தால் தான் சமூகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட முடியும். ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமானால் அரசியல் அமைப்பும் திளைத்திருக்க வேண்டும்" என அவர் பேசினார்.

பின்னர், கர்நாடக மாநில சமூக நலத்துறை அமைச்சர், எச்.சி.மகாதேவப்பா பேசுகையில், "நமது அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மக்கள் தங்களின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். எனவே, பள்ளி, கல்லூரிகளில், அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படும். இந்த முன்னெடுப்பு அரசியலமைப்பு உருவாக தேவைப்பட்ட இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளை மாணவர்களுக்கு தெரிவிக்க உதவும். அதே வேளையில் அதில் சொல்லப்பட்டுள்ள பொறுப்புகளையும் மாணவர்களுக்கு கற்பிக்கலாம்" என அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசியலமைப்பு அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பி.ஆர். அம்பேத்கர் அளித்த பரிசு. மேலும், இந்நூல் நீதியையும் சமத்துவத்தையும் வலியுறுத்தும் ஒரு புனிதமான சட்ட புத்தகம். இதன் முகவுரையைப் படிப்பதில் பிரதான நோக்கமும் உள்ளது. இது, நமது நாடு எந்த சிந்தனை அடிப்படையில் நிறுவப்பட்டது என்பதனை குழந்தைகளுக்கு எளிதில் புரிய வைக்க உதவும்” எனவும் பேசினார்.

கிடைத்த சில தகவல்களின்படி, கர்நாடகாவின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் காலைத் தொழுகையின் போது முன்னுரையை வாசிக்க வேண்டும் எனவும், பின்னர் அரசியலமைப்பு கொள்கைகளை தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுப்பதை அரசு கட்டாயமாக்கவுள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT