Skip to main content

தேர்தல் வியூக வகுப்பாளர் பணியிலிருந்து விலகல் - பிரசாந்த் கிஷோர் திடீர் அறிவிப்பு!

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

prasant kishor

 

இந்திய அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்து, அவர்களின் கட்சியைத் தேர்தலில் வெற்றிபெற வைக்கும் வியூக வகுப்பாளராக அறியப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இதற்காக, ஐ-பேக் என்கிற தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

 

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களின் தேர்தலில், தமிழகத்தில் திமுகவிற்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸிற்கும் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றினார். இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் வியூகம் வகுக்கும் பணியிலிருந்து விலகப்போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "நான் தேர்தல் வியூக வகுப்பாளர் பணியிலிருந்தும், ஐ-பேக்கிலிருந்தும் விலகப்போகிறேன். நான் எனது வாழ்க்கையில் வேறொன்றை செய்ய விரும்புகிறேன். ஐ-பேக்கை எனது சக ஊழியர்கள் வழிநடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.

 

பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில் பாஜக 100 தொகுதிகளை வென்றால் தேர்தல் வியூக வகுப்பாளர் பணியிலிருந்து விலகிவிடுவதாக அறிவித்திருந்தார். தற்போது பாஜக வெறும் 85 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வரும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் விலகல் முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“2026ல் மக்களுக்கான பிரதிநிகள் நிறைய பேர் இருப்பாங்க” - விஷால் கணிப்பு

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vishal about 2024 and 2026 election, his political party, and vijay tvk entry

விஷால் புது அரசியல் கட்சி தொடங்குவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்து, “வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட விஷால், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரது இயக்கம் குறித்த கேள்விக்கு, “நற்பணி இயக்கம், குறிப்பிட்ட நாட்கள், பண்டிகை நாட்கள் மட்டும் இல்லாமல் எல்லா நாட்களிலும் செயல்படும். எங்கே பிரச்சனைகள் வந்தாலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமைக்கு சொல்லிவிடுவார்கள். உடனே நாங்கள் சரி செய்வோம். படப்பிடிப்பிற்கு போகும் போது, அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம். அங்கு சின்ன சின்ன அடிப்படை வசதி கூட இல்லாமல் இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. அதனால் உதவிகளைப் பூர்த்தி செய்தால் மனசு சந்தோஷமாக இருக்கும். அந்த வகையில் நற்பணி இயக்கம் சார்பாக தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருப்போம்” என்றார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, “உண்மையிலேயே ஒரு ரசிகனா, தமிழ்நாட்டில் இருக்கும் குடிமகனா அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதே என்னுடைய கட்சி பெயர் என்ன, அவருடன் கூட்டணியா, என்பதெல்லாம் தேவையில்லை. என்னை பொறுத்தவரையில் மக்கள் சேவை செய்ய இத்தனை கட்சி தேவையில்லை. எல்லாருக்குமே ஒரே குறிக்கோள் தான். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தான். அதற்கு இப்போது இருக்கிற கட்சிகளே அதிகம். அதைத் தாண்டி ஒருவர் நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறார் என்றால், அவருடைய நம்பிக்கையில் தான் வருகிறார்” என்றார்.

மேலும், “அரசியல் என்பது பொதுப்பணி மற்றும் சமூக சேவை. அது ஒரு துறை கிடையாது. பொழுதுபோக்கிற்காக வந்துட்டு போகிற இடமும் கிடையாது. எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்திருப்போம். அந்த வகையில் அனைவரும் அரசியல்வாதி தான். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்வது, அல்லது வரப்போறன்னு சொல்லிட்டு வராமல் இருப்பது...அப்படி எதுவும் இல்லை. அந்தந்த நேரத்தில், அதற்கான காலகட்டத்தில் முடிவெடுக்கப்படும். நடிகர் சங்கத்தில் நான் பொதுச்செயலாளராக ஆவேன் என எனக்கே தெரியாது. ஒரு நடிகனாக 2004ல் இருந்து செயல்பட்டு வருகிறேன். எனக்கு கார்டு கொடுத்த ராதாரவி அண்ணனை எதிர்த்து நிற்பேன் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. அதே போல் தான் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும். அதனால் எல்லாமே அந்த காலம் எடுக்கக் கூடிய முடிவு தான்” என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, “கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். நான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்பதை நேரம் வந்தால் சொல்லுவேன். இதற்கு முன்னாடி ஒரு முறை கேப்டன் அண்ணனுக்கு தான் ஓட்டு போட்டேன் என சொல்லியிருக்கிறேன். அதில் ஒளிவு மறைவு ஒன்னும் கிடையாது. சொன்னாலும் ஜெயிலில் பிடித்து போடமாட்டார்கள்” என்றார். 2026 தேர்தல் குறித்த கேள்விக்கு, “என்னுடைய கணிப்பின்படி 2026ல் மக்களுக்கான பிரதிநிகள் நிறைய பேர் இருப்பாங்க” என்றார்

Next Story

நிதிஷ்குமாரின் முடிவு; பிரசாந்த் கிஷோரின் கணிப்பு - பரபரப்பான தேர்தல் களம்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
 Prashant Kishor Prediction on Nitish Kumar Politics

பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடங்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில்தான் கடந்த 28 ஆம் தேதி நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, மகா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் அன்று மாலையே பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌதிரி, விஜய் சின்ஹா இருவரும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்கள். 

இதனிடையே பாஜகவை வீழ்த்துவதற்காக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கினார் நிதிஷ்குமார். இந்தியா கூட்டணி தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவைகளை பற்றி ஆலோசித்து வரும் நிலையில், நிதிஷ்குமார் தற்போது அதில் இருந்து பாஜக தலைமையில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருப்பது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் நிதிஷ்குமாரின் முடிவு குறித்து தேர்தல் வீயூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வரைகூட இந்த புதிய கூட்டணி நீடிக்காது. இதனை நான் உங்களுக்கு எழுதி தருகிறேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த 6 மாதங்களில் இந்தக் கூட்டணியில் மீண்டும் மாற்றம் நடக்கும். இதனைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய கணிப்புப்படி சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தால் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறமுடியாது. அப்படி வெற்றிபெற்றுவிட்டால், நான் இதிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.