Postponement of negotiations with farmers

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

Advertisment

அதன்படி நேற்று முன்தினம் (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்தா ராய் ஆகியோர் பங்கேற்றனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நேற்று (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி தொடங்கினர்.

Advertisment

அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் இன்று (14-02-24) இரவு 7 மணிக்கு மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவிருந்தது. அதில் மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் காணொளி மூலம் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்தது.

Advertisment

இந்த நிலையில், விவசாயிகளுடன் இன்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நாளை (15-02-24) மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.