ADVERTISEMENT

யாருக்கு அதிகாரம்? புதுச்சேரியில் மீண்டும் எழுந்திருக்கும் சர்ச்சை

04:00 PM Aug 10, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட அதிகாரமில்லை! உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு!

ADVERTISEMENT

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதால் அதிகாரிகள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தியுள்ளது. ஆய்வு என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் கலக்காமல் அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதால் அரசு நிர்வாகத்தை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு, மசோதா போன்றவைகளிலும் தலையிடுவதால் நிர்வாகம் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 'அரசின் நடவடிக்கைகளில் தலையிட சிறப்பு அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு உள்ளது என்ற மத்திய அரசு 2017- ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், ' புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்படி புதுச்சேரி அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. மாநில அந்தஸ்து இல்லை என்றாலும் புதுச்சேரி அரசு மாநிலங்களுக்கு உரிய அதிகாரத்துடன் செயல்படுகிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அந்த முடிவுக்கு ஏற்றபடி தான் யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணைநிலை ஆளுநரும் செயல்படமுடியும்

. அவருக்கென தனியாக பிரத்தியோக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை. சில விவகாரங்களில் அரசின் முடிவுகளில் உடன்பாடு இல்லை என்றால் அமைச்சரவை இடம் ஆலோசிக்கலாம். அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவையின் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பீடு செய்து, ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை உயர்த்தி மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு ஆளுநருக்கு வழங்கிய சிறப்பு அதிகார உத்தரவை ரத்து செய்வதா'க கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தார்.



அந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 'சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை அணுகி தீர்வு கண்டு கொள்ளுமாறு கிரண்பேடிக்கு அறிவுறுத்தியது. அதன்படி தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கிரண்பேடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதேபோல் மத்திய அரசின் உள்துறையும் தனியாக மனுவை தாக்கல் செய்துள்ளது.

அம்மனுவில், "யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக மத்திய உள்துறை புதுச்சேரி அரசுக்கு தகவல் அனுப்பியது. அந்தக் கடிதம் குறித்து புதுச்சேரி அரசே கேள்வி எழுப்பாத நிலையில் மூன்றாம் மனுதாரர் எப்படி அரசின் கடிதப் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்பி வழக்கு தொடர முடியும்? இதை தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். மனுதாரர் வழக்கு தொடர உரிமை இல்லை. நிர்வாகம் தொடர்பான விவகாரத்தை சட்டப்பேரவை அதிகாரத்துடன் தொடர்புபடுத்தி தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரண்பேடி மற்றும் மத்திய அரசின் உள்துறை தாக்கல் செய்த மனுக்கள் குறித்த விசாரணை விரைவில் நீதிமன்ற விசாரணைக்கு வர உள்ளது.

இதனால் யாருக்குத் தான் அதிகாரம் எனும் சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT