Skip to main content

முதலமைச்சர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு; உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சுயேட்சை எம்.எல்.ஏ.

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Pondicherry MLA in struggle and complaint on CM Rangasamy

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஏனாம் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மல்லாடி கிருஷ்ணராவ் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த தேர்தலில் காங்கிரஸிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். ஏனாமில் மல்லாடி கிருஷ்ணராவ் போட்டியிடாமல் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட கொல்லபள்ளி ஸ்ரீனிவாச அசோக் என்பவர் வெற்றி பெற்றார். சுயேட்சையாக வெற்றி பெற்ற இவர் பா.ஜ.க கூட்டணியின் முதலமைச்சரான ரங்கசாமியை ஆதரித்தார். அதேசமயம் ரங்கசாமியை எதிர்த்துப் போட்டியிட்டு தான் வென்றதால் தனது தொகுதியை முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து புறக்கணிப்பதாக பல முறை குற்றஞ்சாட்டி வந்தார்.

 

இந்நிலையில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாச அசோக் தனது தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக்கூறி நேற்று சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதால் பல முறை கோரிக்கை வைத்தும் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது தொகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராமல், மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து முடக்குவதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மீது குற்றஞ்சாட்டினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆலோசனை மற்றும் அவரது தூண்டுதலின் பேரிலேயே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான தனக்கு எந்தவித அரசு விழாக்களுக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்படாமல், தொடர்ந்து தன்னை புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார்.

 

அவர் மேலும் கூறுகையில், "வரும் காலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். மக்கள் நலத்திட்டங்களை முடக்குவதை ஆளும் அரசு நிறுத்திக்கொண்டு, தனது மக்கள் நலத்திட்டங்களுக்கான கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

அவரிடம் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் இரு வாயில் கதவுகளும் மூடப்பட்டன. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. அசோக்கிடம் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் சமரசம் செய்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். ரங்கசாமியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேரவைத் தலைவர் அறைக்கு வந்த அசோக் பழச்சாறு அருந்தி தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். அப்போது அவர், "எனது 14 கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். முதல் கட்டமாக மருத்துவம், கோயில் கமிட்டி, சுகாதார கமிட்டி உள்ளிட்ட 5 கோரிக்கைகள் உடனடியாக ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும். மற்ற கோரிக்கைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்ததை அடுத்து உண்ணாவிரதத்தை ஒத்தி வைத்தேன்" என்று குறிப்பிட்டார்.

 

இதனிடையே பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் பா.ஜ.க ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோர் ஏனாம் எம்.எல்.ஏ. அசோக்கின் 14 கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருமாறு சபாநாயகர் செல்வத்திடம் மனு அளித்தனர். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், "பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். தொகுதி பிரச்சனைகளை சரி செய்து தருவதாகத் தெரிவித்துள்ளோம். தற்போது பா.ஜ.க - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெறுகிறது. தற்போது உள்ள சூழல் தொடர்பாக பா.ஜ.க. மேலிடத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று மேலிடம் கூறியுள்ளது. வரும் 15 ஆம் தேதிக்குள் மேலிடத்திலிருந்து அகில இந்திய பா.ஜ.க. அமைப்புப் பொதுச்செயலாளர் சந்தோஷ் புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமியிடம் பேசி முடிவு காண்பார். கண்டிப்பாக சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்" என்றார்.

 

புதுச்சேரியை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வரும் சுயேட்சை எம்.எல்.ஏ.வின் திடீர் உண்ணாவிரதம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னர் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், பா.ஜ.க ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் ஆகியோர் இதே போல் சட்டப்பேரவையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆளும் அரசுக்கும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் எதிராக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள், ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பா.ஜ.க - என்.ஆர் காங்கிரஸுக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசலைக் காண்பிப்பதாக உள்ளது என்று சொல்கிறார்கள் புதுச்சேரி அரசியல் விமர்சகர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்