Skip to main content

புகைக்குண்டு வீச்சுக்கு மத்தியில் விவசாயிகள் மீது மலர்கள் தூவிய போலீசார்!

Published on 08/12/2024 | Edited on 08/12/2024
The police sprinkled flowers on the farmers in the midst of the incident

பஞ்சாப் விவசாயிகள் சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாக்குறுதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். அப்போது, விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப் - ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்தது. மேலும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில்  முடிந்தன. இதனையடுத்து, அந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இத்தகைய சூழலில்  தான் பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாகச் செல்லும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன்படி பஞ்சாப் - ஹரியான எல்லையான ஷம்புவில் இருந்து விவசாயிகள் தங்கள் பேரணியை நேற்று முன்தினம் (06.12.2024) தொடங்கினர். அப்போது, இரும்பு வேலிகள், பேரி கார்டுகள் உள்ளிட்டவற்றை வைத்து, விவசாயிகளை ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அதனையும் மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு காரணமாக 6 விவசாயிகளுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால், போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக விவசாயி சங்கத் தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று (08-12-24) விவசாயிகள் மீண்டும் ஷம்பு எல்லையில் இருந்து டெல்லியை நோக்கிச் செல்ல விவசாயிகள் முயன்றனர். அப்போது விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டை வீசினர். இந்த மோதலில், விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த போராட்டம் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. போராட்டம் தற்காலிமாக நிறுத்தப்பட்டதால், விவசாயிகள் மீது போலீசார் மலர்களை தூவினர். 

சார்ந்த செய்திகள்