Skip to main content

ஹத்ராஸ் வழக்கு... சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள்...

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

police officers suspended in hathras case

 

 

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

 

ஹத்ராஸில் 19 வயது இளம்பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண், இரண்டு வாரங்கள் உயிருக்கு போராடி டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதனைத்தொடர்ந்து நடந்த அடுத்தடுத்த சம்பவங்களும் மிகப்பெரிய சர்ச்சைகளாக வெடித்துள்ளன. 

 

உயிரிழந்த இளம்பெண்ணின் சடலத்தை போலீஸாரே இரவு நேரத்தில் தகனம் செய்ததாக கூறப்படுவது, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது, பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என போலீஸார் தெரிவித்தது என அடுத்தடுத்து இந்த விவகாரத்தை சர்ச்சைகள் சூழ்ந்தன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரைன், ககோலி ஹோஷ் தஸ்திதார், பிரதிமா மொண்டல் ஆகியோர் நேரில் சென்றபோது ஹத்ராஸ் எல்லையில் அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், டெரிக் ஓ பிரைன் போலீஸாரால் கீழே தள்ளிவிடப்பட்டார்.

 

அப்போது, எதற்காக தடுத்து நிறுத்துகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பிய எம்.பி., பிரதிமா மொண்டல் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், அவர் கீழே விழுந்ததும் ஆண் போலீஸார் அவரை தொட்டதாகவும் முன்னாள் எம்.பி., மமதா தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். இப்படி பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில், இந்த வழக்கு தொடர்பாக காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பணியிடைநீக்கம் செய்யப்படும் எஸ்.பி. மற்றும் டிஎஸ்பிக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.