கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கேரளாவை சேர்ந்த ரெஹனா பாத்திமா என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்றார். ஆனால் பக்தர்கள் போராட்டம் காரணமாக அவர் திரும்பிச்சென்றார்.
இந்த ஆண்டு அவர் கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சபரிமலை கோவிலுக்கு செல்ல விரும்புவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, " இந்த சூழ்நிலையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது. இதுதொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுவந்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்" என்றார்.